சனி, 31 மே, 2014

இந்தியாவில் நலிந்துவரும் விவசாயம்...?

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் பவர்" - என்கிறது குறள்.

ஆனால் இன்று விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விவசாயத்தை விட்டு விட்டு நகர் புறத்திற்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. இதைப் பற்றி எல்லாம் நாம் அரசியல் வாதிகளுக்கு கவலை இல்லை. ஓட்டுக்காக ஒரு சில "இலவச" திட்டங்களை அறிவிப்பதோடு முடிந்து விடுகிறது அவர்களின் கடமை. 

விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கித் தங்கள் நாட்டை வளமிக்க நாடாகச் செய்திடும். ஆனால் இந்தியாவோ அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகமோ இந்த நியதியைப் புறக்கணித்து, அறிந்தோ, அறியாமலோ தமிழக விவசாயத்தை புதை குழிக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. கலர் டிவிக்காக செலவிடப்பட்ட 600 கோடி ரூபாயில் மூன்று இலட்சம் கறவை மாடுகளை வங்கி கொடுத்திருக்கலாம் என்கிறது ஒரு செய்தி.



'உணவுப் பஞ்சம்' என்கிற பூதம் கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து மிரட்டிக் கொண்டே இருக்கிறது. என்றைக்கு வீட்டுக்குள் பாயும் என்று தெரியவில்லை. இத்தகையச் சூழலிலும் மற்ற துறைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பங்கைகூட வேளாண் துறைக்கு வழங்க நம் அரசு தயாராக இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.     (நன்றி- இத்தகவலை இணையதில் வெளியிட்ட வினோத் குமார் அவர்களுக்கு)




தமிழகத்தில் அரசாங்க ரகசியமாக அரங்கேறிவரும் மீதேன் திட்டங்கள். கடலூர் மாவட்டம் ,விருதாசலம் தொடங்கி அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடை மருதூர் ,கும்பகோணம் ,திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் ,குடவாசல் ,நீடமங்கலம் வரையிலான வளமான பகுதிகளில் நிலத்தடியில் இருக்கும் மீதேன் வாயுவை எடுக்க உரிமம் பெற்று இருக்கிறது கிரேட் ஈஸ்டன் எனர்ஜி என்கிற நிறுவனம் .'இங்கு கிடைக்கும் மீதேன் வாயு ,விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் மூலம் எடுத்து செல்லப்படும் ' என்று சமந்தப்பட்ட நிறுவனம் அறிவித்தது.


தஞ்சை: மதுக்கூர் அருகே மீத்தேன் எரிவாயு இருப்பதாக விவசாயி நிலத்தில் யாருக்கும் தெரியாமல் கல் ஊன்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் விவசாயிகள் 11 கல்லை உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே கண்ணுக்குடி கிழக்கை சேர்ந்தவர் சிதம்பரம். விவசாயி. இவரது குடும்பத்தி னருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தை சுற்றி நேற்றுமுன்தினம் கருங்கல் நடப்பட்டிருந்தது. நேற்று காலை அதனை பார்த்த சிதம்பரம் மற்றும் கிராம மக்கள் இதுகுறித்து விசாரித்தனர்.அப்போது, 3 ஏக்கர் நிலத்தில் பெட்ரோல் மற்றும் மீத்தேன் எரிவாயு கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனவே நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவித்து நிலத்தை சுற்றி கருங்கல் ஊன்றப்பட்டது தெரியவந்தது. மேலும் கருங்கல்லில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து சிதம்பரம், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் விவசாயிகள், கிராம மக்கள் ஆகியோர் வந்து நிலத்தில் ஊன்றப்பட்ட 11 கருங்கற்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நம்மாழ்வார் கூறும்போது, ‘‘மீத்தேன் வாயு, பெட்ரோல் உள்ளிட்டவைகளை சாகுபடி நிலத்தில் எடுப்பதை தடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்தால் விவசாய நிலம் பாதிக்கப்படும். 

நிலத்தடி நீர் வற்றிப்போகும். மேலும் அருகில் உள்ள விவசாய பம்பு செட்டுகளுக்கு தண்ணீர் கிடைக்காது. இப்பகுதியே பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும். எனவே இதை கடைசிவரை கடுமையாக எதிர்ப்போம்‘‘ என்றார்.


விவசாயிகளின் நிலை பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரையிலிருந்து....

"மக்கள் தொகைப் பெருக்கத்தினால், தேவை பொன்னுக்கு மட்டுமின்றி நெல்லுக்கும்தான் அதிகரிக்கிறது. சிலர் கேட்பார்கள், பொன்னைத் தின்ன முடியுமா என்று. அது போல் வெறும் மண்ணையும் தின்ன முடியாது என்பது நமக்கு அர்த்தமாவதில்லை.தினமும் 24 மணி நேரமும் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகளில் பொன்னின் விலை வரி வரியாக ஓடுகிறது. எவனாவது நெல்லின், கோதுமையின் விலை பற்றிச் சொல்கிறானா?"
1997 முதல் 2007 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் நம் நாட்டில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 936 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 18,300 பேர்.
"இவர்களில் யாரும் காதல் தோல்வியாலோ, கிரிக்கெட் தோல்வியாலோ, அபிமான சினிமா நடிகை திருமணம் செய்துகொண்டதாலோ, வயிற்று வலியாலோ சாகவில்லை. கடன் தொல்லையால், வட்டி கொடுக்க முடியாமல், பயிர்களின் நட்டங்களினால் தற்கொலை செய்துகொண்டவர்கள். போர்களில் இறக்கிறவர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகமானது."
"உலகமயமாதல் என்கிறார்கள். உலகம் ஒரே கிராமம் என்கிறார்கள். தகவல் தொலைத்தொடர்பு, விஞ்ஞான வளர்ச்சி என்கிறார்கள். சந்திரனுக்கு விண்கலன்கள் ஏவப்பட்டாயிற்று. ஏவுகணைகள் கண்டம் விட்டுக் கண்டம் பாய்வன. தயார் நிலையில் உள்ளன. அணுகுண்டு ஆயத்த நிலையில் சாவு சுமந்து ஓய்வுகொள்கின்றன. ஆனால், சபிக்கப்பட்ட உழவர் இனத்துக் கண்ணீர் மஞ்சளுக்குப் பாய்ந்து இஞ்சிக்கும் பாய்ந்துகொண்டு இருக்கும்."
எதிர்காலத்தில் சிலரையாவது சந்திரனில் குடியேற்ற முடியுமா, விவசாயம் செய்ய முடியுமா (!) என்ற ஆராய்ச்சிக்கு முன்னால், பூமியில் விவசாயத்தை மேம்படுத்த எதாவது செய்தல் புண்ணியமாக போகும்

2 கருத்துகள்:

  1. அனைவரும் விவசாய நிலைமை பற்றி
    அறிந்து கொள்வது அவசியம்.

    பதிலளிநீக்கு
  2. மக்களுக்கு சரியான விழிப்புணர்வு தேவை, இன்னும் 5 ஆண்டுகளில் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் தவிக்க போகிறோம்.....

    பதிலளிநீக்கு

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!