படிக்காத மேதைகள்....!

முதன் முதலில் ஒரு கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது அதற்கு பேராசிரியராகவும், முதல்வராகவும் நியமிக்கப்பட்டவர்கள் யார்? 
முதன் முதலில் மருத்துவர் படிப்பிற்கான ஒரு கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது, ஏற்கனவே மருத்துவர் பட்டம் பெற்ற பேராசிரியரா வந்து பாடம் நடத்தி இருப்பார்...?

"படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு....
பாடம் படிக்காத மேதைகளும் பாரினிலுண்டு..." என்று பாடல் எழுதியவரும் கல்லூரிக்கு சென்று படித்து பட்டம் பெறாத மேதை. கவிஞர். கண்ணதாசன் அவர்கள். அந்தப்பாடலின் விளக்கமாகவே மற்றொரு படிக்காத மேதை தமிழ் நாட்டில் வாழ்ந்து வரலாற்றில் நீங்காத இடம் பிடித்து மறைந்தார். 


படிக்காத மேதை: காமராசர்.


பள்ளிக்கூடம் சென்று படிக்காத தமிழ்சித்தர்கள் எழுதிய நூல்கள் இன்றைய முதுகலை பட்டப்படிப்பிற்கும், அதற்கும் மேல் ஆய்வு பட்டங்களுக்கும் பாடப்புத்தகங்களாக மாறிவிட்டது.

எழுத்தறிவு, மொழியறிவு, மருத்துவ அறிவு, கலையறிவு, இயந்திரசாதனங்களின் அடிப்படை விஞ்ஞானம் போன்ற அனைத்தையும் கண்டுபிடித்து இன்று நாம் சிரமமின்றி பட்டதாரிகளாகவும், வல்லுனர்களாகவும், நிபுணர்களாகவும் (professionals and technologists) மாறுவதற்கு காரணமாக இவை எல்லாவற்றிக்கும் வித்திட்டவர்கள் யார்?

இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பாருங்கள். அவர்களெல்லாம் படிக்காதவர்கள்தான். ஆமாம்....ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மாண்புமிகு. காமராசர் அவர்கள்தான் தமிழகத்திற்கு இலவச கல்வி திட்டத்தை கொண்டுவந்தார்.

கல்லூரிக்கு சென்று படிக்கவில்லை என்றாலும் உலகத்தையும், உலகவியலையும் மனிதத்தையும், மனிதாபிமானத்தையும் நன்கு கற்றுணர்ந்தவர்கள்தான் படிக்காத மேதைகள் என்பதற்கு தகுதி உள்ளவர்களாகிறார்கள். அத்தகையோருள்ளும் திரு.காமராசர் அவர்களே முதல்வராக இருக்கிறார்.

அந்த பெருந்தலைவர் 1903–ம் ஆண்டு ஜூலை மாதம் 15–ந் தேதி, விருது நகர் என்று அழைக்கப்படும் அப்போதைய விருதுபட்டியில் குமாரசாமி நாடார்– சிவகாமி அம்மையாருக்கு புதல்வனாக பிறந்தார். 16 வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து அரசியல் பிரவேசம் கண்டார். தமிழகத்தில் 9 ஆண்டுகள் முதல்–அமைச்சராக பணியாற்றினார்.

இலவச கல்வியையும், மதிய உணவு திட்டத்தையும் 1957–ம் ஆண்டிலேயே கொண்டு வந்து முதன் முறையாக உலகுக்கே வழிகாட்டினார், கல்வி கண் திறந்த காமராஜர். அன்றே அவர் கொண்டு வந்த இலவச கல்வி, மதிய உணவு திட்டம் தான் இன்று நமது நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 

காமராஜர் நினைத்திருந்தால் நேருக்கு பிறகு நாட்டின் 2–வது பிரமராக பதவி ஏற்று இருக்க முடியும். ஆனால் பதவி சுகத்துக்கு மயங்காத அவர், நேருக்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்கு பிறகு இந்திரா காந்தியையும் பிரதமராக்கினார். இதனால் மன்னருக்கு முடிசூட்டிய ‘கிங்மேங்கர்’ என்ற கிரீடம் அவருக்கு சூட்டப்பட்டது.

கிங் மேக்கராக விளங்கிய அவர் வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டுத் திரும்புவார். அவரைப் பார்க்க உயர் அதிகாரிகள் பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவிலே போகிற மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளை அழைத்து வரச் செய்வார். அந்த அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களின் நலங்களை விசாரிப்பார். உங்களுக்கெல்லாம் அரிசி பருப்பு ஒழுங்கா கிடைக்குதா? விலைவாசி எல்லாம் எப்படி இருக்குது, என்றெல்லாம் அடிப்படையான பிரச்சினைகளைப் பற்றி உன்னிப்பாகக் கேட்பார். 



ஒருநாள் அவரிடம் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி, தனது இல்லத் திருமணத்துக்கு காமராஜர் வரவேண்டுமென்று கேட்டு, அழைப்பிதழோடு வந்தார். அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த காமராஜர் தியாகியின் வறுமை நிலையயை உணர்ந்து கொண்டார். அந்தத் திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகவும் அதனால் திருமணத்துக்கு வர இயலாது என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். தியாகி வருத்தத்தோடு வீடு திரும்பினார்.

திருமண நாள் வந்தது. காமராஜரின் கார் அந்தத் தியாகியின் வீட்டு வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி வந்த காமராஜரைப் பார்த்ததும் தியாகியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

காமராஜர் அவரிடம், ""நீ அழைப்பிதழ் கொடுத்தபோது உன் வீட்டுத் திருமணத்துக்கு வர முடிவு செய்துவிட்டேன். ஆனால் இதை நான் அப்பவே சொல்லியிருந்தால், முதலமைச்சர் வருகிறார் என்று ஏகப்பட்ட கடன் வாங்கித் திருமணத்தைத் தடபுடலாக நடத்தியிருப்பாய். உன்னை கடன்காரனாக ஆக்க நான் விரும்பவில்லை'' என்று கூறியதும் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.


பெருந்தலைவர்: காமராசர்.


            
              வட்ட செயலாளர் ஆகி விட்டாலே, தங்கத் தட்டிலில் சாப்பிடும் காலம் இது. ஆனால் எளிமையாக வாழ்ந்த காமராஜர் உணவு பழக்க வழக்கத்திலும் எளிமையை கடை பிடித்தார்.சாதம், ஒரு குழம்பு, கொஞ்சம் கீரை மசியல், ஒரு பொரியல் சிறிது மோர் என்றஅளவில் மிக எளிமையாக உணவு வகை இருந்தாலே காமராஜருக்குப் போதுமானது.அவரிடம் உதவியாளராகவும் சமையல்காரராகவும் இருந்த பைரவனிடம் அவர், நாம் அனாவசியமாக செலவு செய்யக் கூடாது.ரேசன் அரிசியைத்தான் வாங்கிச் சாப்பிட வேண்டும். சாதாரண மக்கள் எந்த உணவைச் சாப்பிட்டு வருகிறார்களோ, அதைத்தான் நாம் சாப்பிட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார்.ரேசன் அரிசி என்றால், இப்போது உள்ள உயர் ரக அரிசி அல்ல. அந்தக் காலத்தில்கொட்டை கொட்டையாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மிக மோசமானதாகவும் ரேசன் அரிசி இருக்கும். 

               அதை வாங்கித் தீட்டிக் கல் பொறுக்கிச் சுத்தப்படுத்திதான் சமைக்க வேண்டும்.அப்படிச் சமைத்தாலும் சாதம் நாற்ற மெடுக்கும். இதனால் சாதாரண மக்களே ரேசன் அரிசியை வாங்குவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தனர்.பரம ஏழைகளும் கூலித் தொழிலாளர்களும்தான் ரேசன் அரிசியைச் சமைத்து உண்பார்கள்.இப்படிப்பட்ட நாற்றமெடுத்த ரேசன் அரிசியைக் கொண்டு சமைத்த சாதத்தைத்தான் காமராஜர் பல ஆண்டு காலம் முகம் சுளிக்காமல் சாப்பிட்டுவந்தார்.ரேசன் அரிசி சாதத்தில் வரும் நாற்றத்தைச் சரிக்கட்ட சாப்பாட்டில் ஓரிரு சொட்டு நெய்யைவிட்டாலே போதும் என்று யாரோ சொல்ல காமராஜர் ஐம்பது கிராம் நெய்யை வாங்கி வரச் செய்து, தினசரி இரண்டு சொட்டு நெய்யைச் சாப்பாட்டில் தெளித்துக் கொண்டு சாப்பிட்டு வந்தாராம். 

               
               சுமார் ஏழெட்டு ஆண்டுகள் வரை நாற்றமெடுத்த ரேசன் அரிசியையே சாப்பிட்டு வந்த காமராஜர், பின்னர் சக்தி அரிசி, எனப்படும் கைக்குத்தல் அரிசியை வாங்கி வந்து சமைக்கும்படி சொன்னார். வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தான் அவர் சன்னரக அரிசி சாதம் சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

   இது தான் பெருந்தலைவர் பிறப்பின் பெருமை. எளிமை, நியாயம், நேர்மை, வீரம், விவேகம் என்று அவரது குணநலன்களை அடுக்கி கொண்டே செல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னலம் அற்றவர். இத்தனை நற்குணங்களை கொண்ட பெருந்தலைவர் படித்தது 6–வது வகுப்பு மட்டுமே. ஆனால் அவரை பற்றி இன்று உலகமே படித்து கொண்டு இருக்கிறது. காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த சொத்து விபரம் தெரியுமா?

இறவாப்புகழ் பெற்ற மாமனிதர்.



1.சட்டை பையில் ..........................ரூபாய் 100
2.வங்கிகணக்கில்..........................ரூபாய் 125
3.கதர் வேட்டி....................................................4
4.கதர் துண்டு ...................................................4
5....
கதர் சட்டை....................................................4
6.காலணி.............................................ஜோடி 2
7.கண் கண்ணாடி .............................................1
8.பேனா ..............................................................1
9.சமையலுக்கு தேவையான பத்திரங்கள் -6


மக்கள் நலனுக்காக பாடுபடுவதாக நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டும் திரிந்துக்கொண்டும் இருக்கின்ற தலைவர்களுக்கு இவரைப்பற்றியும் கொஞ்சம் எடுத்துச்சொல்லுங்கள்.

தகவல்களுக்கு நன்றி:  
https://www.facebook.com/1tamil?ref=stream
https://www.facebook.com/Vivasayi See More


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!