ஒரே கல்லில் ஒரு கோவில்....!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில், கழுகுமலை பேரூராட்சியில், வெட்டுவான் கோவில் எனுமிடத்தில் உள்ள மலையில் சிற்பக்கலையின் சிகரமாக கருதப்படும் வெட்டுவான் கோவில் எனும் கோவில் அமைந்துள்ளது.
(பாறைக்குடைவுகளில் வித்தியாசம் என்பது கட்டுமானம் மேலேருந்து கீழாக செய்து கொண்டு வரப்படும்.)



பெரிய மலைப் பாறையை 7.50 மீட்டர் அகலத்திற்கு சதுரமாக வெட்டியெடுத்து கோவிலாகச் செதுக்கியுள்ளனர். இதன் காலம் கி.பி. 8 ம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 1300 வருடங்களுக்கு முற்பட்டது. எல்லோராவில் உள்ள கைலாச நாதர் கோவிலை ஒத்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்செழியன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது.



வரலாறு

அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணதீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன. வெட்டுவான் கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்றது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்பணி முற்று பெறவில்லை. சிகரம் மட்டும் முற்றுப் பெற்றுள்ளது. இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இக்கோயிலிலுள்ள உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை. விமானத்தின் மேற்பகுதியில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும் இவற்றுக்கு கீழ் யாளிவரியும் கபோதகமும் அமைந்துள்ளன.
சமணர்களின் முக்கியப்பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்திலுள்ள மலையின் சரிவில் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை.

சமணர் பள்ளியின் ஒரு பகுதி.
 
வெட்டுவான் கோவிலின் புகைப்படம்.


மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த வரலாற்று சின்னங்கள், கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள மலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பல இடங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான சமணர்கால குகைகள், குகை கோயில்கள், சிற்பங்கள் வரலாற்றை கூறும்வண்ணத்தில் அமைந்துள்ளன. மேலும் பிராமி மற்றும் வட்டெழுத்துகள் போன்ற ஆரம்பகால தமிழ் எழுத்துகளும் இங்குள்ள மலைகளில் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் நாம் நேரில் சென்று பார்க்கும் பொழுது வியப்பூட்டக்கூடிய கலைப் படைப்புகளையும், சிற்பங்கலையும் அவற்றுள் பொதிந்துள்ள வரலாற்றுக் கருத்துகளையும், உண்மைகளையும் நாம் அறியமுடிகிறது.




2 கருத்துகள்:

  1. அனைவரும் தேடிச்சென்று தரிசிக்க வேண்டிய ஆலயம்
    ஆண்டவன் அருள் புரியட்டும்
    மேற்கு நோக்கிய முருகன் ஆலயங்களில் முக்கியமானதாக உணர்கிறேன் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!