வியாழன், 20 மார்ச், 2025

புதினா!!,

மருத்துவ குணம் வாய்ந்த புதினா!!, 
புதினாவில் இத்தனை குணங்களா???

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்களின் பால பாடம். 
நமது முன்னோர் தங்களுக்கு வரும் பிணிகளை உணவில் மாற்றங்களை செய்வதன் மூலமே போக்கிக் கொண்டனர்.
 இந்த வரிசையில் தமிழர்கள் உணவில் அடிக்கடி இடம் பெறும் ஒரு தாவரம் புதினா. மடிந்த விளிம்புகளுடன் கூடிய பச்சை பசேலென்ற இலைகளுடன் காணப்படும் புதினா அபாரமான மணமும், ருசியும் கொண்டது. புதினா ஒரு புதிரான தாவரமும் கூட.

புதினாவில் வயல் புதினா, கார்ன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பெப்பர் மின்ட் என்பன உள்பட 40 வகை புதினாக்கள் இருக்கின்றனவாம். 
இதில் ஏ.பி.சி வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, புரதம் என்று பல சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்கள் பெருங்குடல் புற்று நோயை தீர்க்கும் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
ஐந்து ரூபாய்க்கு கைநிறைய கிடைக்கும் புதினாவின் மருத்துவ சக்தி அபாரமானது. புதினாவை உணவில் அனைத்து கீரைகள் மற்றும் காய்கறிகளுடனும் சேர்த்து பயன்படுத்தலாம். பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புதினா, வயிற்று வலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச் சிக்கல், உப்புசம், வயிற்றுப் போக்கு உள்பட பல வயிற்றுக் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. இதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்குவதுடன், காய்ச்சல், நீர்க்கடுப்பு அகலும். செரிமானம் ஆவதில் பிரச்சினை இருந்தால் புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செரிமானக் கோளாறு நீங்கி விடும்.
ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு புதினாச் சாறு அளித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகி குழந்தைகள் வீரிட்டு அழுவது நிற்கும். புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் மென்தால் என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினாவில் இருந்து பற்பசையுடன், காதுவலி, வீக்கம், சைனஸ், மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.
புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த அளவு தீ வைத்து, நீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி, குடைச்சல் இருக்கும் பாகங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். மூட்டு வலிக்கு இந்த முறை சிறந்த பயனளிக்கும். புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஊளைச் சதை குறைந்து ‘சிலிம்’ ஆகலாம். புதினா பற்றிய ஆராய்ச்சிகள் இன்றும் உலக அளவில் நடந்த வண்ணம் உள்ளன. இதன்மூலம் புதினாவை பற்றிய பல புதிர்களை அவிழ்க்க வாய்ப்பு உள்ளது...........

திங்கள், 28 டிசம்பர், 2020

‘களரி’

தென்இந்தியாவில் புகழ் பெற்று விளங்கிய வீரக் கலை களரி. இந்த விளையாட்டில் தெக்கன் களரி, வடக்கன் களரி மற்றும் மத்திய களரி ஆகிய 3 வகைகள் உள்ளன. இதில் தெக்கன் களரியை அகத்திய முனிவரும், வடக்கன் களரியை பரசுராமனும் அறிமுகப்படுத்தியதாக முன்னோர்கள் கூறுவதுண்டு. இந்த 2 முறைகளில் இருந்து தோன்றியது மத்திய களரி என்றழைக்கப்படுகிறது. 

களரியில் சாண் கம்பு, முச்சாண் கம்பு (3 சாண் கம்பு) 6 சாண் கம்பு, ஒற்றைக்கம்பு, 12 சாண் கம்பு மற்றும் சிரமம் என்று அழைக்கப்படும் கம்பு (இது தரையிலிருந்து ஒரு மனிதனின் நெற்றிப்பொட்டு வரை நீளம் உடையது), வாள், வடிவாள், சுரிகை, உருமி (சுருட்டுவாள்), கடாரி, கடகோரி ஈட்டி, கெதா, வாளும் கேடயமும், துண்டும் கத்தியும் ஆகிய ஆயுதங்கள் இடம் பெறுகின்றன. இந்த கலையை முழுமையாக கற்றுக்கொள்ள பல ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியதிருக்கும். 

களரியில் வாய்த்தாரி, மெய்த்தாரி, கோல்த்தாரி, அங்கத்தாரி, வெறுங்கை பிரயோகம் போன்ற பயிற்சி முறைகள் உள்ளன. வாய்மொழியாக குரு பாடலை பாட அதற்கேற்றார் போல் சீடர்கள் சுவடுகள் வைத்து பயிற்சியை மேற்கொள்வார்கள்.  அதுவே ‘வாய்த்தாரி’

மெய்த்தாரி என்பது களரி பயிற்சி முறைகளை மிக நன்றாக செய்யும் வண்ணம் உடம்பை பக்குவப்படுத்துவதற்காக செய்யும் சுவடு முறைகளை குறிக்கும். 

ஆயுதங்கள் வைத்து செய்யும் பயிற்சி முறைகள் அங்கத்தாரி என்று அழைக்கப்படுகிறது. கம்பு வைத்து செய்யும் பயிற்சிமுறை கோல்த்தாரி எனப்படுகிறது. கை, கால்களை மட்டுமே பயன்படுத்தி செய்யும் பயிற்சி வெறுங்கை பிரயோகமாகும்.


பயிற்சியாளர் சொல்கிறார்: 

‘‘உடலில் மறைந்திருக்கும் முக்கியமான வர்மங்களை கணித்து அந்த இடத்தில் எதிரியை தாக்கி நிலை குலைய செய்யும் கலைதான் களரி. நாடி நரம்புகளை அடிப்படையாக கொண்டு இந்தக்கலை திகழ்கிறது. ஆங்கிலேயர் நமது நாட்டை ஆட்சி செய்த காலத்தில் நமது நாட்டின் மன்னர் ஆட்சியில் இருந்த போர்வீரர்கள் அனைவரும் தற்காப்பு கலையை கற்று இருந்தனர். அதனால் அவர்களை எளிதாக வெல்ல முடியவில்லை. இதை அறிந்த ஆங்கிலேயர் இந்த தற்காப்பு கலைகளை அடியோடு ஒழிக்க முடிவு செய்தனர். எனவே ஆங்கிலேயருக்கு தெரியாமல் இந்த கலை கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. இதற்காக பல அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதில் மறைந்திருந்து ரகசிய பயிற்சி அளித்தார்கள்.

களரியில் முதலில் கற்றுக்கொள்வது ‘மெய் பயிற்று’. மெய்பயிற்று என்றால் உடற்பயிற்சி என்று பொருள். இந்த வீரவிளையாட்டை திறமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நமது உடல் நன்றாக வளைந்து நமது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். அதற்காகதான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 


அதைத்தொடர்ந்து காலுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் 32 முறைகள் உள்ளன. ஒருவரும், ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் தாக்க வரும்போது, அவர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இந்த பயிற்சியில் சொல்லிக்கொடுப்போம். அதற்கு அடுத்ததாக கம்பு பயிற்சி. இதில் 18 முறைகள் உள்ளன. அடுத்ததாக  உள்ள செருவடியில் 12 முறைகளும், ஒட்டாவில் 30 முறைகளும், அடுத்ததாக உள்ள கட்டாரா, வாளும் கேடயமும், ஈட்டி, சுருள்வாள், துண்டு–கத்தி போன்றவற்றில் பல்வேறு பயிற்சி முறைகளும் உள்ளன. 


6 வயதில் இருந்து இந்த கலையை கற்றுக்கொள்ளலாம். 18 வயதாகும்போது களரியில் உள்ள அனைத்து முறைகளையும் கற்று வெளியே செல்லும்போது, தன்னிடம் ஆயுதம் இருக்கும் பட்சத்தில் ஒருவர் துப்பாக்கியை கொண்டு சுட்டாலும் அந்த நபரால் எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இந்த கலை உதவியாக இருக்கிறது. 

இதில் உள்ள முறைகள் அனைத்தையும் கற்றுக்கொண்ட பின்பு வைத்திய முறைக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. உடலில் அடி பட்ட இடத்தில் வர்மம் ஏற்பட்டால் அதற்கு ஏற்ப வைத்திய சிகிச்சையை ஆசான்கள் செய்வார்கள். இந்த சிகிச்சை முறை ‘சித்த வர்ம வைத்தியம்’ என்று அழைக்கப்படுகிறது.

களரியில் வாரி, ஆனவாரி போன்ற பூட்டு முறைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பூட்டுகள் வர்ம புள்ளிகளை குறிவைத்தே செய்யப்படுகிறது. ஒரு மனிதனின் உடம்பில் தொடுவர்மம் 96–ம், படுவர்மம் 12 என்று மொத்தம் 108 வர்மப்புள்ளிகள் உள்ளன. தலையில் 25–ம், கழுத்து முதல் நாபி வரை 45–ம், நாபி முதல் மூலம் வரை 9–ம், கையில் 14–ம், காலில் 15–ம் இருக்கிறது. இதை வாத வர்மம் 64–ம், பித்த வர்மம் 24–ம், சிலேத்தும வர்மம் (கப வர்மம்) 6–ம், உள்வர்மம் 14 என்றும் குறிப்பிடலாம். இந்த வர்மத்தை களரி படிக்கும் அனைவருக்கும் கற்றுக்கொடுப்பதில்லை. கற்றுக்கொள்பவரின் நடத்தை, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவைகளை அறிந்துதான் கற்றுக்கொடுக்கப்படும். 

இந்த கலையை ஒருவர் நன்றாக படித்தால், குறைந்தது 10 பேரை தனி ஆளாக நின்று தாக்கி அவர்களை நிலைகுலைய செய்யலாம். இதை கற்றால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி, எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம். மேலும் இதில் சிகிச்சை முறையையும் கற்றுக்கொடுப்பதால் சுளுக்கு, வர்ம சிகிச்சைகளும் அளிக்கலாம்’’ என்றார். 

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் களரி பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு பயிற்சி பெறுபவர்களை படத்தில் பார்க்கிறீர்கள். இவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று ஏராளமான பதக்கங்களை குவித்திருக்கிறார்கள். 

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

ஆயுத எழுத்தின் சிறப்பு....!

கீழ்கண்டவாறு, தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தில் காணப்படும் 

முதற்பாடலிலேயே ஆய்த எழுத்தின் பயன்பாடு அறியப்படுகிறது....!
முதலில் இது ஆயுத எழுத்தா, ஆய்த எழுத்தா என்கிற விவாதம் தமிழ் 

மொழியை அதிகமாக கற்றவர்கள் மத்தியில் இருந்து வருகிறது...!

ஆனால், ஆய்தம் என்ற சொல்லானது ஆயுதத்தையே நேரடியாக பொருள் 

கொள்ளும். ஆய்தல் என்ற வினைப்பெயரானது அல் என்ற விகுதியைப் பெறும்: 

ஆய்தம் என்ற பெயர்சொல்லானது அம் என்ற விகுதியைப் பெறும்...!

இந்த விகுதியை  இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் பிழையற 

பயன்படுத்தியுள்ளார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை...!

எழுத்துக்களின் வகை
------------------------------------
1. எழுத்தெனப் படுப

அகரமுதல் னகர இறுவாய்


முப்பஃதென்ப


சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.


அவைதாம்,


குற்றியலிகரம் குற்றியலுகரம்


ஆய்தம் என்ற


முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன

திங்கள், 26 அக்டோபர், 2015

இசைத்தமிழின் தொன்மை.!


சங்ககாலத்தில் இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூன்று பிரிவுகள் (Departments) இருந்தது. இந்த மூன்று பிரிவுகளிலுமே நூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். நாடகத் தமிழில் நாட்டியக்கலையும் அடங்கும். இவைகளைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் ஒரே ஒன்றுகூட நமக்கு கிடைக்கவில்லை.!
மிகப்பழமையான இசைக்கலை பற்றிய சிற்பங்களும், இசைப்படிகள, இசைத்தூண்கள் போள்றவைகளும் நடனக்கலை சிற்பங்களும் மட்டுமே (தமிழர்களுடையதாக) நாம் அறியக் கிடைக்கிறது.! இதைப்பற்றி நாம் ஏதாவது பேசினால், மொழி என்பது தொடர்புக்காக மட்டுமே என்று வாதிடுகிறார்கள்.!

வீணை போன்றது உடைபட்ட நிலையில்.

ஆன்மீகம், தத்துவஞானம், கலைஞானம், வாழ்வியல், வரலாறு, இனப்பெருமை, குலப்பெருமை ஆகிய அனைத்தையுமே உள்ளடக்கிய நமது தாய்மொழியை எவ்வாறு தொடர்பிற்காக மட்டுமே என்று நாம் ஒதுக்கிவிட முடியும்.?
சங்கத்தமிழ் என்பது மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தது.
ஆயினும், இசைத் தமிழுக்காகவும், நாடகத் தமிழுக்காகவும் எழுதப்பட்ட பல நூல்கள் நூல்கள், காணாமற் போனதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளது.!

உளிகள் உருவாக்கிய ஏழு சுரங்கள்.!
ஏழு சுரங்களை முதலில் கண்டுபடித்தவர் தமிழர்களே என்பதற்கு கீழ்காணும் ஆதாரமானது போதுமானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கற்களைக் கொண்டே ஏழு சுரங்களை அமைத்துக்காட்டிய அதிசயமானது இன்றளவும் நிலைத்திருக்கிறது.! இவ்வாறெல்லாம் செய்து காட்டுவதாக இந்த நவீன விஞ்ஞான காதிலும் சவால் விட்டுக்கூற முடியாது...!

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

மகாபாரதக் கதைகள் தமிழகத்தில் நிகழ்ந்தவைகளா?

மகாபாரதக் கதைகள் தமிழகத்தில் நிகழ்ந்தவைகளா?
மகாபாரதப் போர் நிகழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும், இலக்கிய ஆதாரங்களும், பழங்கால சிற்ப ஆதாரங்களும் வேறு எந்த இடத்தைக் காட்டிலும் தமிழகத்திலேயே அதிகமாக உள்ளது. அதற்கான காரிய காரணங்களை ஆராய்ந்து வெளியிடும் முயற்சியில் தமிழ் பேரறிஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்து மதத்தினர் உண்மையான உள்ளத்துடன் இதற்கு ஆதரவு தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.. 
மகாபாரதக் கதைகள் தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகே வழக்கிற்கு வந்தது எனலாம்.... ஆனால், அதற்கும் முற்பட்ட காலத்திலேயே, பஞ்சபாண்டவர் இரதங்களுடன் சேர்த்து, ஏழு இரதங்கள் மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது....
அவற்றுள், இரண்டு இரதங்கள் கடற்கோளினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபாண்டவர் இரதங்கள்.
முழ்கிய பகுதிகளில் கடைசங்க காலத்தைச் சேர்ந்த  பகுதிகளும் உள்ளதாக ஆய்வாளர்களின் முடிபுகள் கூறுகிறது. ஆனால், கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக முனைவர்.  சு.சௌந்திரபாண்டியன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு "புராண உண்மைகள் " என்ற புத்தகமானது வெளிவரப்போவதாக இருக்கும் நிலையில்,  ''பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல'' என்கிற பரப்புரையானது, எவ்விதமான ஆதாரமும் இன்றி விக்கிபீடியா போன்ற இணையதளங்களில் பதிவேற்றப்படுகிறது.


திங்கள், 20 ஜூலை, 2015

மூல நோய்க்கு எளிய வைத்தியம்.!

மூல நோயை விரட்ட:
🌀 வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா... பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும்.

தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும்.
மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் மருத்துவர் சசிக்குமார்.