திங்கள், 28 டிசம்பர், 2020

‘களரி’

தென்இந்தியாவில் புகழ் பெற்று விளங்கிய வீரக் கலை களரி. இந்த விளையாட்டில் தெக்கன் களரி, வடக்கன் களரி மற்றும் மத்திய களரி ஆகிய 3 வகைகள் உள்ளன. இதில் தெக்கன் களரியை அகத்திய முனிவரும், வடக்கன் களரியை பரசுராமனும் அறிமுகப்படுத்தியதாக முன்னோர்கள் கூறுவதுண்டு. இந்த 2 முறைகளில் இருந்து தோன்றியது மத்திய களரி என்றழைக்கப்படுகிறது. 

களரியில் சாண் கம்பு, முச்சாண் கம்பு (3 சாண் கம்பு) 6 சாண் கம்பு, ஒற்றைக்கம்பு, 12 சாண் கம்பு மற்றும் சிரமம் என்று அழைக்கப்படும் கம்பு (இது தரையிலிருந்து ஒரு மனிதனின் நெற்றிப்பொட்டு வரை நீளம் உடையது), வாள், வடிவாள், சுரிகை, உருமி (சுருட்டுவாள்), கடாரி, கடகோரி ஈட்டி, கெதா, வாளும் கேடயமும், துண்டும் கத்தியும் ஆகிய ஆயுதங்கள் இடம் பெறுகின்றன. இந்த கலையை முழுமையாக கற்றுக்கொள்ள பல ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியதிருக்கும். 

களரியில் வாய்த்தாரி, மெய்த்தாரி, கோல்த்தாரி, அங்கத்தாரி, வெறுங்கை பிரயோகம் போன்ற பயிற்சி முறைகள் உள்ளன. வாய்மொழியாக குரு பாடலை பாட அதற்கேற்றார் போல் சீடர்கள் சுவடுகள் வைத்து பயிற்சியை மேற்கொள்வார்கள்.  அதுவே ‘வாய்த்தாரி’

மெய்த்தாரி என்பது களரி பயிற்சி முறைகளை மிக நன்றாக செய்யும் வண்ணம் உடம்பை பக்குவப்படுத்துவதற்காக செய்யும் சுவடு முறைகளை குறிக்கும். 

ஆயுதங்கள் வைத்து செய்யும் பயிற்சி முறைகள் அங்கத்தாரி என்று அழைக்கப்படுகிறது. கம்பு வைத்து செய்யும் பயிற்சிமுறை கோல்த்தாரி எனப்படுகிறது. கை, கால்களை மட்டுமே பயன்படுத்தி செய்யும் பயிற்சி வெறுங்கை பிரயோகமாகும்.


பயிற்சியாளர் சொல்கிறார்: 

‘‘உடலில் மறைந்திருக்கும் முக்கியமான வர்மங்களை கணித்து அந்த இடத்தில் எதிரியை தாக்கி நிலை குலைய செய்யும் கலைதான் களரி. நாடி நரம்புகளை அடிப்படையாக கொண்டு இந்தக்கலை திகழ்கிறது. ஆங்கிலேயர் நமது நாட்டை ஆட்சி செய்த காலத்தில் நமது நாட்டின் மன்னர் ஆட்சியில் இருந்த போர்வீரர்கள் அனைவரும் தற்காப்பு கலையை கற்று இருந்தனர். அதனால் அவர்களை எளிதாக வெல்ல முடியவில்லை. இதை அறிந்த ஆங்கிலேயர் இந்த தற்காப்பு கலைகளை அடியோடு ஒழிக்க முடிவு செய்தனர். எனவே ஆங்கிலேயருக்கு தெரியாமல் இந்த கலை கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. இதற்காக பல அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதில் மறைந்திருந்து ரகசிய பயிற்சி அளித்தார்கள்.

களரியில் முதலில் கற்றுக்கொள்வது ‘மெய் பயிற்று’. மெய்பயிற்று என்றால் உடற்பயிற்சி என்று பொருள். இந்த வீரவிளையாட்டை திறமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நமது உடல் நன்றாக வளைந்து நமது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். அதற்காகதான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 


அதைத்தொடர்ந்து காலுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் 32 முறைகள் உள்ளன. ஒருவரும், ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் தாக்க வரும்போது, அவர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இந்த பயிற்சியில் சொல்லிக்கொடுப்போம். அதற்கு அடுத்ததாக கம்பு பயிற்சி. இதில் 18 முறைகள் உள்ளன. அடுத்ததாக  உள்ள செருவடியில் 12 முறைகளும், ஒட்டாவில் 30 முறைகளும், அடுத்ததாக உள்ள கட்டாரா, வாளும் கேடயமும், ஈட்டி, சுருள்வாள், துண்டு–கத்தி போன்றவற்றில் பல்வேறு பயிற்சி முறைகளும் உள்ளன. 


6 வயதில் இருந்து இந்த கலையை கற்றுக்கொள்ளலாம். 18 வயதாகும்போது களரியில் உள்ள அனைத்து முறைகளையும் கற்று வெளியே செல்லும்போது, தன்னிடம் ஆயுதம் இருக்கும் பட்சத்தில் ஒருவர் துப்பாக்கியை கொண்டு சுட்டாலும் அந்த நபரால் எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இந்த கலை உதவியாக இருக்கிறது. 

இதில் உள்ள முறைகள் அனைத்தையும் கற்றுக்கொண்ட பின்பு வைத்திய முறைக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. உடலில் அடி பட்ட இடத்தில் வர்மம் ஏற்பட்டால் அதற்கு ஏற்ப வைத்திய சிகிச்சையை ஆசான்கள் செய்வார்கள். இந்த சிகிச்சை முறை ‘சித்த வர்ம வைத்தியம்’ என்று அழைக்கப்படுகிறது.

களரியில் வாரி, ஆனவாரி போன்ற பூட்டு முறைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பூட்டுகள் வர்ம புள்ளிகளை குறிவைத்தே செய்யப்படுகிறது. ஒரு மனிதனின் உடம்பில் தொடுவர்மம் 96–ம், படுவர்மம் 12 என்று மொத்தம் 108 வர்மப்புள்ளிகள் உள்ளன. தலையில் 25–ம், கழுத்து முதல் நாபி வரை 45–ம், நாபி முதல் மூலம் வரை 9–ம், கையில் 14–ம், காலில் 15–ம் இருக்கிறது. இதை வாத வர்மம் 64–ம், பித்த வர்மம் 24–ம், சிலேத்தும வர்மம் (கப வர்மம்) 6–ம், உள்வர்மம் 14 என்றும் குறிப்பிடலாம். இந்த வர்மத்தை களரி படிக்கும் அனைவருக்கும் கற்றுக்கொடுப்பதில்லை. கற்றுக்கொள்பவரின் நடத்தை, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவைகளை அறிந்துதான் கற்றுக்கொடுக்கப்படும். 

இந்த கலையை ஒருவர் நன்றாக படித்தால், குறைந்தது 10 பேரை தனி ஆளாக நின்று தாக்கி அவர்களை நிலைகுலைய செய்யலாம். இதை கற்றால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி, எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம். மேலும் இதில் சிகிச்சை முறையையும் கற்றுக்கொடுப்பதால் சுளுக்கு, வர்ம சிகிச்சைகளும் அளிக்கலாம்’’ என்றார். 

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் களரி பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு பயிற்சி பெறுபவர்களை படத்தில் பார்க்கிறீர்கள். இவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று ஏராளமான பதக்கங்களை குவித்திருக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!