புதன், 28 மே, 2014

மீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம் – த.அருண்குமார்

CBM எனப்படும் நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு திட்டத்தினால் நிறைய நாடுகள் பாதிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் மக்கள் போரட்டங்கள் இதை தடை செய்யக்கோரி முழுவீச்சுடன் நடந்து வருகின்றன. இந்தக் காலத்தின் இளைஞர்களுக்கு எல்லா வகையிலும் கனவு தேசமாக இருக்கும் அமெரிக்காவிலேயே பெருமளவு விதி மீறல்களும் மற்றும் பாதிப்புகளும் நடந்திருக்கின்றன. பணம் ஒன்றே குறியாக இருக்கும் இந்த எரிவாயு நிறுவனங்களுக்கு தேசம், மக்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. எல்லா தேசத்திலும் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த கட்டுரை முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெறும் CBM மீத்தேன் எரிவாயு நிறுவனங்களால் அங்குள்ள மக்கள் அடைந்த துயரங்கள், தீமைகள், ஆபத்துக்கள் என்றே நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் அமெரிக்காவை உதாரணமாக கொள்ளும் நம் மக்கள் அங்கு நடக்கும் CBM என்னும் தீமை மிகும் திடத்தையும் பார்த்து இதன் தீமைகளை உணர வேண்டும்!
“Hydraulic Fracturing” அல்லது “Fracking” என்று அழைக்கப் படும் இந்த நவீன தொழில்நுட்பத்தை பற்றி விரிவாக அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். ஏனென்னில் இந்த முறையில் தான் தஞ்சையில் மீத்தேன் எரிவாயு எடுக்கப் பட இருகின்றது.
பூமியில் மிக ஆழத்தில் அழுத்தங்கள் மிக அதிகமாக இருக்கும். சில இடங்களில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட பாறைகளும் இருக்கும் (கிலோ மீட்டர் நீள, அகலம் கொண்ட பாறைகள்) சில இடங்களில் உள்ள மணல் பரப்பானது நீர் கூட புகமுடியாத தன்மை கொண்டதாக மிகுந்த இறுக்கத்தில் இருக்கும். இவை எல்லாமுமே மிக ஆழத்தில் என்று நினைவு கொள்ளுங்கள். (ஏறத்தாழ 8, 000 மீட்டர் முதல் 10, 000 மீட்டர் வரை) இப்படிப்பட்ட இடத்தில உருவாகும் இயற்கை எரிவாயு பாறைகளிலும், மணல் பரப்புகளிலும் ஊடுருவ இயலாமல் வெளிப்பட வழி இல்லாமல் அங்கேயே தங்கி விடுகின்றன. அத்தகைய இயற்கை எரிவாயுவின் சிறிய சிறிய அளவுகளை சேகரித்து முழுமையாக கொண்டுவர இந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்டறிந்ததே இந்த Hydraulic Fracturing என்று அழைக்கப் படும் “நீரியல் விரிசல்” முறை.

இதன் படி பூமியை 10, 000 மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலுமான ஆழத்தில் துளையிட்டு அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரையிலும் அதற்க்கு மேலும் எல்லா திசைகளிலும் பக்கவாட்டு துளை (bore) போடப்படும். பின்பு பூமிக்கு மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் தேர்வு செய்யப்பட்ட வேதி நுண் துகள்களை (Proppants) கலந்த நீர் மிகுந்த அழுத்தத்தில் செலுத்தப் படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டு துளைகளில் செல்லும் நீரானது அந்த துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே சிறைபட்ட, வழி இல்லாமல் உள்ளேயே அடைபட்டு கிடந்த மீத்தேன் எரிவாயுவின் சிறிய பகுதிகள் ஒன்றோடு ஒன்று கலந்து நீரில் ஒன்றாக கலந்து விடுகின்றன. அவ்வாறு கலந்த நீரை மீண்டும் உறிஞ்சி பூமியின் மேல்பரப்பிற்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்தகரிக்கப்பட்டு எஞ்சிய கழிவு நீர் “நீராவி மூலம் ஆவியாகப்படும் குட்டைகளுக்கு “(Evaporation pond’s) எடுத்துசெல்லப்படும். பெரும்பான்மையான இடங்களில் அவை நீர் நிலைகளில் கலந்து விடப்படும். இதுவே (Hydraulic Fracking) என்று அழைக்கப்படும் செயற்கையாக பூமிக்கு கீழே நீரின் மூலம் விரிசல்கள் உண்டாக்கி அதன் மூலமாக மீத்தேன் எரிவாயு சேகரிக்கும் முறை.
இதில் என்ன தீமை என்று நினைகிறீர்களா? பொறுங்கள் இதன் முறைகளை பகுதி பகுதியாக பார்க்கலாம். மிக பெரிய தீமைகளை 9 வகைகளாக பிரிக்கலாம். அவற்றைப் பற்றி சொல்லும் முன்…
ஒரு இடத்தைக் கண்டறிந்து அதன் சுற்றுப்புறங்களில் அருகருகே துளையிட்டு (well bore) எரிவாயு எடுப்பது பழைய முறை. நவீன தொழில் நுட்பத்தில் 10 கிலோ மீட்டர்களுக்கு ஒரே ஒரு மிகப்பெரிய துளையிட்டு அதன் அடிமட்டத்தில் இருந்து அதன் எல்லா கோணங்களிலும் பக்கவாட்டில் ஏராளமான துளைகளை வெவ்வேறு மட்டங்களில் ஏற்ப்படுத்தி அதன் மூலம் மீத்தேன் எரிவாயு எடுப்பது புதிய சர்சைகளுக்கு உள்ளாகும் முறை. இதுவே தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வரப்போகும் ஆபத்து.
ஒரு கிணறு அமையும் இடத்தை சுத்தப்படுத்த 5 நாட்களும், அந்த இடத்தில துளையிட்டு கிணறு அமைக்க 50இல் இருந்து 100 நாட்களும். ஒரு முறை நீரியல் விரிசல் முறையை செயல் படுத்த 2இல் இருந்து 5 நாட்களும் ஆகும். இவ்வாறு அமைக்கும் எரிவாயு கிணற்றில் இருந்து 20 வருடங்களில் இருந்து 40 வருடங்கள் வரை மீத்தேன் எரிவாயு எடுக்கலாம்.
ஒரு கிணற்றுக்கு குறைந்தபட்சம் 400 டேங்கர் லாரிகள் நீர் எடுத்து வருவதற்கும் கழிவு நீரை எடுத்து செல்வதற்கும் தேவைப்படும்.
ஒரு முறை நீரியல் விரிசல் செயல்முறைக்கு 5,66,33,693 லிட்டர் நீர் தேவைப்படும். இந்த நீரில் மணல் மற்றும் வேதிப் பொருட்களை கலந்து (fracking fluid) நீரியல் விரிசலுக்கென்றே பிரத்தியேகமான கரைசல் திரவத்தை தயாரிப்பார்கள். குறைந்த பட்சம் 40,000 கேலன் அதாவது 1,51,416 லிட்டர் நீர் தேவைப்படும் அந்த வேதி பொருட்கள் கலந்த திரவத்தை ஒரு முறை தயாரிக்க.
இந்த பிரத்தியேக வேதிபொருட்கள் கலந்த திரவத்தை தயாரிக்க கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட வேதி பொருட்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. ஈயம் (LEAD), பாதரசம் (MERCURY), உரேனியம் (URANIUM), ரேடியம்(RADIUM), மெத்தனால் (METHANOL), ஹைடரோ குளோரிக் அமிலம் (HYDROCHLORIC ACID), பார்மால்டிஹைட் (FORMALDEHYDE) ஆகியவை குறிப்பிட தகுந்தவை. இன்றுவரை எந்தெந்த வேதியியல் தனிமங்கள் மற்றும் பொருட்கள் கலந்துள்ளன என்ற விவரங்களை எரிவாயு நிறுவனங்கள் தந்ததே இல்லை. இந்த திரவத்தில் கதிரியக்கத்தை தூண்டக் கூடிய ரேடியம் 226 என்ற தனிமம் கலக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் எரிவாயு கிணறுகளில் அருகில் ஓடிய நீரோடையில் இதன் தாக்கம் அறியப்பட்டது.
மேலும் இந்த நீர்ம வேதி கரைசலில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எளிதில் ஆவியாகக்கூடிய மற்றும் விரைவாக வேதி வினை புரியக்கூடிய வேதி பொருட்களான பென்சீன் (Benzene), டொலுயீன்(Toluene), எத்தில் பென்சீன் (Ethylbenzene), சைலீன்ஸ் (Xylenes). இதில் பென்சீன் என்பது புற்றுநோயை உருவாக்கும் முக்கியமான காரணி. இந்த வேதி கரைசல்கள் BTEX என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இந்த BTEX கலந்து மீத்தேன் எரிவாயு எடுப்பது என்பது தற்போது ஆஸ்திரலியாவில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நீரியல் விரிசல் செயல்படுத்தப்பட்ட கிணறுகளில் அதன் அருகில் உள்ள நீர் ஆதாரங்களின் மூலம் இந்த வேதி பொருள் கலந்த திரவம் உறிஞ்சப்பட்டு மக்கள் உபயோகப் படுத்தக்கூடிய நீர் நிலைகளில் கலந்தது. பின்பு எடுத்த ஆய்வுகள் மக்கள் எரிவாயு கிணறுகள் இல்லாத இடங்களில் பயன்படுத்தும் நீர் நிலைகளில் இருந்து 17 மடங்கு அதிகமான மீத்தேன் எரிவாயு கிணறுகளின் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தோல், சுவாசம் மற்றும் நரம்பியல் நோய்கள் அதிகமாக தாக்கியதற்கான 1000க்கும் அதிகமான ஆதாரங்கள் அங்கு திரட்டப்பட்டன. ரேடியம் 226 என்ற கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் தனிமத்தால் புற்றுநோயும் மக்களை தாக்கியது தெரியவந்தது.
நீரியல் விரிசல் செயல்படுத்திய பின்பு 30% விழுக்காடு வேதி திரவம் மட்டும்தான் அதிகப்படியாக மீண்டும் உரிஞ்சப் படுகின்றன. மீதி விழுக்காடு வேதி பொருட்கள் கலந்த திரவம் அதே கிணற்றிலேயே தேக்கிவைக்கப் படுகின்றன. உயிர்வேதி நொதித்தல் மற்றும் உயிர் வேதியியல் முறையில் அவற்றின் தாக்கத்தை குறைக்க முடியாது. இது மிகப் பெரிய அச்சுறுத்தல்.
அமெரிக்காவின் வடக்கு பென்சில்வேனியாவில் இருக்கும் மீத்தேன் எரிவாயு கிணறுகளின் அருகில் உள்ள வீடுகளின் நீர் எடுக்கும் போர்களில் அனுமதிக்கப்பட அளவான 7 mg மில்லி கிராமில் இருந்து 28 mg மில்லி கிராம் என்ற அளவையும் தாண்டி 64 mg மில்லி கிராம் அளவு மீத்தேன் கலந்து வந்தது தெரிய வந்தது.
# நீரின் தேவை - 2010இல் அமெரிக்காவின் சுற்றுசூழல் பாதுகாப்பு துறை எடுத்த ஆய்வுகளின் படி 70லிருந்து 140 பில்லியன் கேலன் தண்ணீர் (1 கேலன் என்பது 3. 78 லிட்டர்) அமெரிக்காவின் 35,000திற்கும் மேற்ப்பட்ட எரிவாயு கிணறுகளின் நீரியல் விரிசலுக்கு உபயோகப் படுத்தப்பட்டிருகின்றது. இது 50,000 மக்கள் தொகை கொண்ட 40லிருந்து 80 நகரங்கள் வரை உபயோகிக்கும் மொத்த நீரின் அளவிற்கு ஒப்பானது. நிலக்கரி படுகையில் இருந்து மீத்தேன் எடுக்கும் ஒவ்வொரு எரிவாயு கிணறுகளுக்கும் 50,000 கேலன் அளவில் இருந்து 3,50,000 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்தியிருப்பது தெரிய வந்தது. இதுவே இங்கு தஞ்சையில் வரப்போகும் திட்டம். கடினப் பாறைகளில் இருந்து மீத்தேன் எடுக்கும் நீரியல் விரிசல் முறைகளுக்காக ஒவ்வொரு எரிவாயு கிணறுகளும் 2இல் இருந்து 10மில்லியன் கேலன் அளவில் தண்ணீரை உபயோகித்து இருக்கின்றன.
இன்னும் நமது விளக்கங்களுக்காக கணக்கிட்டால் ஆண்டிற்கு 18 TMC தண்ணீரை அவர்கள் செலவழித்து இருக்கிறார்கள். ஒரு கிணறு ஒரு முறை நீரியல் விரிசல்களுக்கு 5,66,33,693 லிட்டர் தண்ணீர் செலவழித்து இருக்கிறார்கள். இது 1 TMCயில். 19% என்பதே இதன் அபாயத்தை தெரிவிக்கும். தஞ்சையில் தான் காவிரி இருக்கின்றதே அவர்களுக்கு வேறு என்ன கவலை! விவசாயத்தை தொலைத்துக்கட்டி விட்டால் நீர் எடுப்பது அரசுக்கு இன்னும் சுலபம். கூடங்குளத்திற்கு நீர் எடுக்கும் ஆதாரமாக பேச்சிப்பாறை அணையை காட்டியது போல் காவிரியை இந்த திட்டத்திற்கு உபயோகிப்பார்கள்.
400 தண்ணீர் டேங்கர் லாரிகள் சுத்தமான மற்றும் கழிவு நீரினை சுமந்து கொண்டு வந்தும் சென்ற வண்ணமும் இருந்தால் அந்த சாலை என்ன ஆகும்? நன்னீர் நிலைகளை அசுத்தமாக்குவதும் அதில் வாழும் உயிரினங்கள் இறக்க நேரிடுவதும் நிகழும்.
CBM நிலக்கரி படுகைகளில் இருந்து மீத்தேன் வாயு எடுக்கும் முறையின் விளைவுகள் மற்றும் அதன் மிக பெரிய தீமைகளை 9 வகைகளாக பிரிக்கலாம். அவை
# மணல் மற்றும் வேதி பொருட்கள் தேவை: வழக்கமான முறையில் எடுக்கப்படும் எரிவாயு கிணறுகளுக்கும் நீரியல் விரிசல் முறையின் மூலம் எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயு கிணறுகளுக்கும் மணல் மற்றும் அதனை ஒத்த சிறுபொருட்கள் வேதி திரவத்தில் கலக்க தேவை படுகிறது. இதை (Proppants) சிறுதிண்மங்கள் என்று பொருள் கொள்ளலாம். இந்த சிறுதின்மங்களாக சிலிக்கா கலந்த மணல்துகள்கள், பசையால் மேற்பூச்சு பூசப்பெற்ற மணல், செராமிக் துகள்கள், மேலும் பசையால் பூசப்பெற்ற செராமிக் துகள்களும் பயன் படுத்தப்படுகின்றன.
வழக்கமான முறையில் எடுக்கப்பெறும் எரிவாயு கிணறுகளுக்கு 35, 000 பவுண்டு எடையுள்ள அதாவது 13,607 கிலோ (13. 5 டன்) அளவுள்ள மணல் தேவைபடுகிறது. நிலக்கரி படுகைகளில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் கிணறுகளுக்கு குறைந்த பட்சம் 75,000 பவுண்டுகள் (34,019 கிலோ/ 34 டன்) அதிக பட்சம் 3,20,000 பவுண்டு (144 டன்) எடையுள்ள மணல் தேவைப்படுகிறது. இருக்கவே இருக்கிறது காவேரி, கொள்ளிடம், சுரண்ட முடியாதா என்ன ? தஞ்சையை சுற்றியுள்ள மணல் அள்ளி பணம் சம்பாதிக்கும் அதிபர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தால் முடிந்தது. அவர்கள் எதிர்பவர்களை அடக்கிகொள்வார்கள். ! சிலிக்கா கலந்த மணல் துகள்களால் நோய் ஏற்பட்டால் இருக்கவே இருக்கின்றது ராஜா மிராசுதார் அரசு பொது மருத்துவமனை.
# நஞ்சான வேதிப்பொருட்களின் பயன்பாடு : மேலும் அதிக அளவில் நீரின் பயன்பாடு மற்றும் அதில் கலந்துள்ள வேதி பொருட்களின் ஆபத்து என்ற குரல்கள் அதிக அளவு எழுந்தபோது இந்த எரிவாயு நிறுவனங்கள் கொடுத்த விளக்கம் என்பது 0. 5% விழுக்காடு என்பதில் இருந்து 2. 0% விழுக்காடு என்ற அளவில் தான் இந்த தீமை தரக்கூடிய வேதி பொருட்களை நீரியல் விரிசலுக்கு பயன்படும் திரவத்தில் கரைக்கப் படுவதாக விளக்கம் அளித்தன. ஆனால் இந்த விவரங்கள் கூட ஒப்பீட்டு அளவில் மிக அதிகமே. எப்படி என்றால் ஒரு முறை இந்த நீரியல் விரிசல் செய்யப்பட 40,00,000 (நாற்பது லட்சம் கேலன்) தண்ணீர் தேவைப்படும் நமது லிட்டர் அளவுகோலில் பார்த்தோமானால் 1,51,41,640 (ஒரு கோடியே ஐம்பதிஒரு லட்சத்து நாற்பத்திஓராயிரத்து அறநூற்று நாற்பது) லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இவ்வளவு மிகப் பெரிய அளவிலான திரவ கரைசலில் 80இல் இருந்து 330 டன் வேதிப் பொருட்கள் கலந்தால் அந்த நீர் எப்படி இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க இயலும். அவர்கள் நேரிலேயே நிகழ்த்தி காட்டுவதை நம்மால் வேடிக்கைதான் பார்க்க இயலும்.
சிறுதின்மங்கள், அமிலங்கள், விரிசல்களில் ஏற்ப்படும் தடைகளை உடைக்க கூடிய வேதி பொருட்கள், நுண் உயிரிகளை கொல்லக் கூடிய வேதி பொருட்கள், pH அளவை சமன்படுத்தக் கூடிய பொருட்கள், களிமண் மற்றும் சகதிகளை கிணறுகளில் உள்ளேயே பிரித்து வைக்கக் கூடிய வேதிபொருட்கள், எரிவாயு குழாய்களில் ஏற்படும் துருவை தவிர்க்க உபயோகிக்கும் வேதி பொருட்கள், சிறு தின்மங்களை விரிசல்களில் அனுப்பக் கூடிய பொருட்கள், தேவையான அளவு அழுத்தத்தை உபயோகித்து நிறைய விரிசல்களை ஏற்ப்படுத்த உதவும் வேதி பொருட்கள், பசைகள், இந்த வேதி பொருட்களுக்கு உள்ளேயே நடக்கக் கூடிய வேதி விளைவுகளை தடுக்கக் கூடிய பொருட்கள், கரைப்பான்கள், மற்றும் திரவத்தின் மேற்பரப்பில் ஏற்ப்படும் அழுத்தம் மற்றும் இழுவை அளவை கட்டுப் படுத்தும் பொருட்கள் என்று இந்த வேதி பொருட்களை வைத்தே தனியொரு கட்டுரை எழுதலாம். இவ்வளவு உபயோகங்களுக்கு பல்வேறு விதமான வேதி பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன.
இந்த 600 வகையான வேதி பொருட்களில் மிகப் பெரும்பான்மையானவை மனித இனத்திற்கும், மற்ற உயிரிகளுக்கும் தீங்கு ஏற்படுத்துபவை. சில வேதிப் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜன் (Carcinogen) எனப்படும் வகையை சேர்ந்தவை மேலும் இரண்டு வேதி பொருட்கள் வேதி வினை புரிந்தால் அவை மூலம் வெளிவரும் வேதி பொருளானது மிகுந்த தீமையை உண்டுபண்ண கூடியதாக இருக்கும். சில வேதி பொருட்கள் மிக மிக சிறிய அளவில் நீர்நிலைகளில் கலந்தால் கூட நீர்நிலைகளின் இயல்பையே மாற்றி விஷமாகி விடும்.
எடுத்துக்காட்டாக சுற்றுசூழலுக்கான குழுக்கள் எடுத்த ஆய்வு முடிவுகளின் படி இந்த எரிவாயு கிணறுகளில் இருந்து வெளிவரும் மண்ணெண்ணெய் (Kerosene) கெரோசின் மற்றும் அதன் துணை வேதி பொருட்கள், நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தப் படும் பென்சீன் (Benzene) என்ற வேதி பொருளுடன் கலந்தால் அது புற்றுநோயை உண்டாக்கும் வீரியமான மற்றொரு வேதி பொருள் ஆகின்றது. இந்த கலவை 0.005 % என்ற அளவில் 10,00,000 (பத்து லட்சம் லிட்டர்) லிட்டர் நீரில் கலந்தாலே புற்றுநோய் வரும் என்றால் அதன் தன்மையை உணரலாம்.
இந்த நீரியல் விரிசலுக்கு பயன்படுத்திய நீரை நீராவியாக மாற்றி வெளியேற்றுவதற்கும் கழிவு நீரை சேகரிப்பதற்கும் ஆங்காங்கே குட்டைகள் அமைப்பார்கள் இந்த குட்டையில் இருந்து வெளியேறும் நீராவியின் மூலம் அமில மழை பொழிவதற்கான சாத்தியங்கள் உண்டு. பெரும் மழை பொழிந்து இந்த குட்டைகள் உடைப்பு எடுத்தாலோ அல்லது மழை நீரில் கழிவு நீர் கலந்து சென்று நிலத்தில் உரிஞ்சப் பட்டாலோ நிலமும் நீரும் மீண்டும் சரி செய்ய இயலாதவாறு மாற்றமடையும்.
#உயிரினங்களின் உடல்நல பாதிப்புகள் : இந்த நீர்ம வேதிப் பொருட்களின் மனித தாக்கம் என்பது அவற்றை சரியாக கையாளாமல் அவை நிலத்தில் சிந்தியோ அல்லது கசிவின் மூலமாக நன்னீர் நிலைகளில் கலப்பதன் மூலமும், அங்கு பணிபுரியம் தொழிலாளர்களின் சருமத்தில் நேரடியாக தாக்கப்படுவதன் மூலமாகவும், நீராவிமூலம் கழிவுகளை வெளியேற்றும் குட்டைகளில் இருந்து வெளிவரும் வாயுக்களை சுவாசிப்பதன் மூலமாகவும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன.
2010ம் ஆண்டு தியோ கர்ல்போர்ன் (Theo Colborn) என்ற ஆராச்சியாளரும் மற்றும் அவரது 3 ஆராய்ச்சி குழுவினர்களும் சேர்ந்து “இயற்கை எரிவாயுவின் எடுக்கும் வழிமுறைகள் : பொது நலத்தின் பார்வையில் இருந்து ” (Natural Gas Operations from a Public Health Perspective) என்ற தலைப்பின் கீழ் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார்கள். அவர்களின் ஆய்வின்படி 353 வேதிப் பொருட்கள் அங்கு இயற்கை எரிவாயு எடுக்கும் நீரியல் விரிசல் முறைகளில் பயன் படுத்தப் பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் 12 விதமான உடல்நலக் குறைபாடுகள் வரும் என்று பட்டியலிடப்பட்டிருந்தது.
தோல், கண், தொடு உணர்வு அழிதல், சுவாசக் கோளாறு, செரிமான மண்டலங்களின் நோய் தாக்கம், ஈரல், மூளை மற்றும் நரம்பு கோளாறுகள், இதய தமனிகள் மற்றும் இரத்தத்தில் நோய் தாக்குதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சிறுநீரக கோளாறு, புற்றுநோய், மரபணு மாற்ற கோளாறுகள், நாளமில்லா சுரப்பிகளில் நோயின் தாக்கம், மற்றும் சூழ்நிலை கேடுகளை தகுந்த ஆதாரங்களுடன் பட்டியலிட்டது அந்த ஆய்வு கட்டுரை. கீழே உள்ள படம் நோயின் தாக்கம் வருவதற்க்கான சாத்தியப்பாடுகளை காண்பிக்கின்றது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!