ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

தாலிகட்டுவது தமிழர் பண்பாடு...!

தாலி கட்டுவது திராவிட இந்துக்களின் வழக்கம் என்று விக்கிபீடீயாவில் எழுதப்பட்டுள்ளது. இதுவே பெரும்பாலானவர்களுடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது. 



ஆனால், திராவிடர்கள் அனைவரிடமும் தாலிகட்டும் வழக்கம் இருக்கிறதா?
தமிழரல்லாத திராவிட இந்துக்கள் அனைவரிடமும் இப்பழக்கம் இல்லை என்பதை நான் அறிவேன். உதாரணமாக, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநில திராவிடர் இந்துகள் பெரும்பாலும் ஐம்படைத்தாலி எனும் பாரம்பரியம் இல்லாதவர்கள். சரி, திராவிடர்களை விட்டுவிடுவோம். ஆரியர்கள் அனைவருமே தாலிகட்டும் வழக்கம் உடையவர்களா? இவர்கள் இந்தியா முழுவதும் பரவியுள்ளனர். ஆனால், தமிழர் கலாச்சாரத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஆரியர்கள் மட்டுமே இந்த வழக்கத்தை மதித்து பின்பற்றுகிறார்கள்.

தமிழருடைய பாரம்பரிய வழக்கத்தை திராவிடர்களுடையது என்றும் இந்துமதத்திற்கு சொந்தமானது என்றும் மாறி மாறி சொல்லிக்கொண்டிருப்பதன் நோக்கம் என்ன?
(ஏற்கெனவே அறுத்தது போதாதா?)

தாலிகட்டுவது தமிழர் பண்பாடா? தருவிக்கப்பட்டதா?
திரு.ஜெயமோகன்,
"தாலம் என்றால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இலை என்றுதான் முதற் பொருள். ஆனால் வடமொழியில் அதற்கு வேர்ச்சொல் இல்லை.வேர்ச்சொல் இருப்பது தமிழில். ஆகவே அது இங்கிருந்துபோன சொல். ‘தால்’ என்றால் இலை என்பதுடன் நாக்கு என்றும் பழந்தமிழ் மொழியில் பொருள் உள்ளது. இலையை மரத்தின் நாக்குகளாகக் கண்ட ஒரு தொல்குடியின் விழியே மொழியாக ஆனதா அது?
அந்த வேர்ச்சொல்லில் இருந்து கற்பனையும் நடைமுறையும் கலந்து பல ஆயிரம் வருடங்களாக சொற்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன.இலையே உண்கலமாக ஆனதனால் தாலம் என்பது உண்கலம்  என்று பொருள் பெற்றது. பின்னர் தட்டுக்கு தாலமென்று பொருள் வந்தது. அதன்பின் தாம்பாளத்துக்கு தாலம் என்று பொருளாகியது. மலையாளத்தில் இன்றுள்ள நடைமுறை வழக்கிலும் தாலம் என்றால் தட்டுதான். தமிழ்நாட்டில் இன்று சில பகுதிகளில் வெற்றிலைத்தட்டு தாலம் என்று சொல்லப்படுகிறது.
எப்போதோ ஒரு கட்டத்தில் பூமியின் மாபெரும் வட்டவிரிவுக்கும் தாலம் என்றே பொருள் வந்தது. இலைபோல் அகன்ற யானையின் காதுக்கும் தாலம் என்றுபெயர்.
பின்னர் குறிப்பாக பனையோலைக்கு தாலம் என்றபெயர் புழங்கலாயிற்று. தாலகி என்றால் பனையிலிருந்து வடிக்கும் கள். தாலத்திலிருந்து வந்ததே தாலி. மணமகன் மணமகள் கழுத்தில் கட்டும் தாலி என்பது ஒரு பனையோலைச் சுருள்தான். இளம்பனையின் ஓலை நறுக்கில் காப்பு மந்திரத்தை எழுதி  அதில் சுண்ணமும் மஞ்சளும் கலந்து பூசி இறுக்கமாகச் சுருட்டி மஞ்சள் நூலால் இறுகச் சுற்றிக்கட்டி மஞ்சள்சரடில் கோர்த்து கட்டுவார்கள். ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னர் வரைகூட அந்த தாலி குமரிமாவட்டத்தில் புழக்கத்தில் இருந்து நான் கண்டிருக்கிறேன்."
(திரு.ஜெயமோகன், http://www.jeyamohan.in/514#.VSFHVtKUdJA)

பண்டையகாலத்தில், தாலிப்பனையின் ஓலைகளை சுருட்டி, நூலினால் கட்டி, கழுத்தில் அணியும் வழக்கம் இருந்தது. இதனால் கழுத்தில் அணியப்படும் அணிகலனுக்கு தாலி என்று பெயர் வந்தது.


சங்க காலத்திற்கு முன்னரே, திருமணமாகத ஆண்பிள்ளைகள், தாம் வேட்டையாடிய புலியின் கோரைப்பற்கள் இரண்டையும் கோர்த்து தாலியாக அணிந்திருந்தனர்.! அதை தாம் ஏற்றுக்கொள்ளும் பெண்சாதியின் கழுத்தில் அணிவித்து கௌரவித்தனர்.! தனது கணவன் ஒரு புலிக்கு நிகரான வீரன் என்கிற பெருமையுடன் அதை பெண்சாதியினர் அணிந்திருந்தனர்.! (புலியை முறத்தால் அடித்து விரட்டிய பெண்களும் அதே சங்ககாலத்தை சேர்ந்தவர்களே.!) 

அதற்கு மஞ்கள் பூசியணியும் வழக்கமும் அவர்களிடம் இருந்தது என்பதற்கு சான்றாக, அல்லூர் நன்முல்லையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் 67 இருக்கிறது.

மகளிர் அணிந்திருந்த தாலியானது வேப்பம்பழம் போன்ற அழகுடன் இருந்ததாகவும், அது புதுநாண் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
குறுந்தொகை 386ல் வெள்ளிவீதியார், தாலி அணிந்த பெண்களை வாலிழைமகளிர் என்று குறிப்பிடுகிறார். மாங்களியம், மங்கலியம், மங்கலவணி போன்ற தூய தமிழ்ச்சொற்களால் தாலியானது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றளவும், அதே புலிப்பல் சின்னமானது பொன்னினால் செய்விக்கப்பட்டு அணிவிக்கப்படுகிறது.!
இத்தகைய வீரவரலாறு
உலகில் தமிழினத்தை தவிர வேறெந்த இனத்திற்கு இருக்க முடியும்?

5 கருத்துகள்:

  1. குறந்தொகையின் காலம் என்ன? திருவள்ளுவர் காலத்திலேயே ஆரியர் தாக்கம தமிழகத்தில் வந்த விட்டது. திருக்குறள் தமிழ்ப் பண்புகளைப் பதிவு செய்ய எழுதப்பட்ட நூல் என்பது என் முடிவு. பல ஆண்களை மணமுடிக்கும் சமுதாயத்தில் தாலி இல்லாமல் இருக்கலாம். தாலி தமிழர் பண்பாடா ? அல்லது வீரத்தை விளக்க அணிவித்த புலி நக அணியை ஆரியர் தாலி என்ற புனிதமாக்கி விட்டனரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்க இலக்கிய நூல்களில் முதன் வரிசையில் உள்ளது குறுந்தொகை.

      எட்டுத்தொகை நூல்கள்:
      "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
      ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
      கற்றறிந்தா ரேத்துங் கலியே அகம் புறம் என்
      றித்திறத்த எட்டுத் தொகை.” - சங்க இலக்கிய பாடல்.

      பத்துப்பாடல்கள்:
      முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
      பெருகு வளமதுரைக் காஞ்சி- மருஒஇனிய
      கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
      பாலை கடாத் தொடும் பத்து" - சங்க இலக்கிய பாடல்.

      திருவள்ளுவரது காலத்தில் தமிழகத்தில் சைவசமயம் இருந்தது.
      ஆனால் ஆரியவாடையோ, சாதீயவாடையோ தமிழ் மக்களிடையே இல்லை என்பதை அவரது குறட்பாக்களை படிப்பதான் மூலமாகவே தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும்.

      குறுந்தொகையில், ஒரே ஒரு பாடலை மட்டும் இடைச்செருகலாக வைத்து விட்டு அதன் காலத்தினை கணிக்கவியலாதவாறு செய்துவிட்டதை தமிழறிஞர்கள் நன்கறிவர். அந்த இடைச்செருகல் எந்த காலத்தை சேர்ந்தது என்பதைக்கொண்டே, தமிழர்களின் பண்பாட்டு பழக்கங்களாகிய சைவம், தாலி, மஞ்சள், குங்குமம், வேப்பிலை பயன்படுத்துதல் போன்றவற்றை அன்னியர் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலம் எதுவென்று தோராயமாக சொல்லமுடியும். இந்த பதில் நீண்டுகொண்டே போகக்கூடியது. எனவே, இதைப்பற்றி தனிப்பதிவாகவே போடப்போகிறேன்.

      ஆரியர்களால்தான் தாலி புனிதமாக்கப்பட்டது என்று நீங்கள் சொன்னதை நினைத்து நான் உண்மையிலேயே வேதனைப்படுகிறேன். தமிழரல்லாதவர்களெல்லாம் தாங்கள் தங்களுடைய தாய்மொழியை வளர்ப்பதற்கு பாடுபடாமல், எங்களுடைய தாய் மொழியைப்பற்றியும், பண்பாட்டைப்பற்றியும்
      விமர்சனம் செய்தே காலம் கழித்துக்கொண்டிருப்பது வேதனையிலும் வேதனையாக இருக்கிறது...!

      நீக்கு
  2. திரு கடாட்சம் , தமிழரல்லாதோர் என யாரைச் சாடுகிறார் என்பது புரியவில்லை. எதுவானாலும் நேரடியாகப் பேசுவது நலம் பயக்கும்.
    விவாதம் என்பது கருத்துப் பரிமாற்றம். மாற்றுக் கருத்துக்கு நேரடி பதில் கூறி விளக்குவது விவாதமாகும்.
    திருவள்ளுவர் காலத்தில் ஆரிய வாடை இல்லை என்பது தவறு என்பது என் புரிதல். ஆரியக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்த காலம் அது. திருக்குறள் அந்தக் கருத்துக்கள் தவறு என க் கூறுகிறது. என் வலைப் பதிவின் மையக் கருத்தே அதுதான்
    திருக்குறள் வாழ்வின் ல்லா நிலைகளையும் கூறுகிறது. தாலி பற்றி என்ன கூறுகிறது.

    பதிலளிநீக்கு
  3. திரு.விச்சன் ஹரி.
    தமிழரல்லாதோரை தமிழரல்லாதோர் எனக்கூறுவது சாடுவதாகுமா?
    நான் நேரடியாக பேசவில்லை என்பதை குருடனிடம் கூறினாலும் ஒப்புக்கொள்வானா?
    உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமான மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள நூல் திருக்குறளே ஆகும். எனவே, அதைப்பற்றி உங்களுக்கும், எனக்கும்தான் தெரியும் என்று சொன்னால் உலகம் ஒப்புக்கொள்ளுமா? சரி ஒப்புக்கொள்ளும் என்றே வைத்துக்கொள்வோம். விவாதத்திற்கான பொருளை முன்வைக்கவும்....?

    பதிலளிநீக்கு
  4. நனறி . என் பதிவு உங்கள் பதில இரண்டுக்கும் இடை வெளி அதிகம். உங்கள் பதிவு valuable information உங்களுக்கு. எதிர் வருபவரை மதித்து நேரடி பதில் அளிக்க மனமில்லா உங்கள் நிலையால் நான் என் பதிவுகளைத் திரும்பப் பெறுகிறேன்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!