புதன், 28 மே, 2014

உலகில் முதலில் தோன்றிய மொழியிலக்கணம்...!

உலகில் முதலில் தோன்றிய மொழியிலக்கண நூல் தொல்காப்பியமே...!



பிற மொழியினரெல்லாம் தங்களுக்கென்று தனித்தன்மை வாய்ந்த ஒரு மொழி இருப்பதை உணராதிருந்த மிகப்பழமையான காலத்திலேயே தமிழர்களுக்கென்று தெளிவாக எழுதப்பட்ட ஒரு இலக்கண நூல் இருந்தது. அதுதான் தொல்காப்பியத்தின் சிறப்பு! தமிழர்களின் ஈடு, இணையற்ற பெருமை...!


தொல்காப்பியம் என்றாலே இலக்கண நூல் என்றுதான் நாம் அறிவோம். ஆனால் இன்று மொழி அறிவியல் என்றொரு வகை இருக்கிறது. லிங்க்விஸ்டிக்ஸ் என்னும் மொழியியல் கோணத்தில் பார்க்கும்போது, வள்ளுவருக்கும் முந்தைய தொல்காப்பியத்தில் மொழிக்கு இலக்கணம் மட்டுமல்ல, ஒலி அமைப்பும் உச்சரிப்பும்கூட தெள்ளத்தெளிவாக, இன்றும் திருத்தம் தேவைப்படாத. திருத்த முடியாத செம்மையான வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது தெரிகிறது.

தொல்காப்பியம் வரையறுக்கிற ஒலிகளும் மாத்திரைகளும், மயக்கங்களும் திரிபுகளும் வியக்க வைக்கின்றன. பெரிய பிரச்சினை என்னவென்றால், நாம் அதனை உணர்ந்து படிக்கவில்லை. பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண்களுக்காக மட்டும்தான் படித்திருக்கிறோம்.

சுருக்கமாக சிலவற்றைப் பார்ப்போம்.
அகரமுத னகர விறுவாய் முப்பதென்ப.
– உயிர் 12, மெய் 18 ஆக மொத்தம் முப்பது.
அப்புறம் சார்பெழுத்துகள் –
குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன.

அதைத் தொடர்ந்து உயிர்க் குற்றெழுத்துகள், நெட்டெழுத்துகள், மெய்யெழுத்துகள் என்று விளக்கும் தொல்காப்பியர், சட்டென ஒரே வரியில் சொல்கிறார் –
மெய்யோ டியையினும் உயிரியல் திரியா.

அதாவது, உயிரெழுத்து மெய்யோடு இயைந்து உயிர்மெய் எழுத்தாக ஆனாலும், அந்த உயிரின் இயல்பு மாறாது. இதுல என்ன பெரிய அதிசயம் இருக்கு.... என்று தோன்றக்கூடும்.
க் + இ = கி, ப் + ஊ = பூ, ம் + ஆ = மா.

தமிழில் உயிரெழுத்துகளுக்கு இணையாக ஆங்கிலத்தில் இருக்கிற A E I O U என்னும் vowels எடுத்துக்கொள்வோம். இதர ஆங்கில எழுத்துகள் கான்சனன்ட்ஸ்.
இப்போது பார்ப்போம். – B I K E – bike. K I T E – kite இங்கே, ஐ என்பது சரியாக அதன் இயல்பு திரியாமல் ஒலிக்கிறது.

இன்னொன்றையும் பார்ப்போம் – B I T – bit, S I T – sit, W I T – wit. இங்கே ஐ என்ற உயிரெழுத்தின் இயல்பு திரிந்து விட்டது. இதே போல
S U N – sun, SON – son, A D D – add, A L L – all

ஆங்கில உயிர் எழுத்துகளின் இயல்பு திரிவது பற்றி இதுபோல ஏராளமான உதாரணங்கள் காட்டலாம். ஆனால் தமிழில் எந்த உயிரெழுத்தும் மெய்யெழுத்தோடு சேரும்போது அதன் இயல்பு திரியாது. எஸ் யு என் – சன் என்று கூறுவது போல MUTHU - முத்துவை மத்து என்று உச்சரிக்க முடியாது. உச்சரிக்க மாட்டோம்.

அதே போல, எந்தெந்த எழுத்துகள் முதலெழுத்தாக வரலாம், எந்தெந்த எழுத்துகள் அல்லது உயிர்மெய்கள் மொழிக்கு முதலாக வராது, மெய்யெழுத்தை அடுத்துவரும் உயிர்மெய் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும், எந்த உயிர்மெய்கள் திரியும், அல்லது மயங்கும், என்பதையெல்லாம் தெளிவாக விளக்குகிறது தொல்காப்பியம்.

1. பன்னீர் உயிரும் மொழிமுத லாகும்.
2. உயிர்மெய் அல்லன மொழி முதலாகா.
3. கதந பம எனும் ஆவைந்தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
4. சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அஐ ஔ எனும் மூன்றலங் கடையே
.5. உஊ ஒஓ என்னும் நான்குயிர்
வ என் எழுத்தொடு வருதலில்லை.
6. ஆ எ ஒ எனும் மூவுயிர் ஞகாரத் துரிய.
7. ஆவோ டல்லது யகர முதலாவது.

இந்த எழுத்துகள் மட்டும்தான் முதலெழுத்துகளாக வரும். விளக்கிச் சொன்னால்,
1. பன்னிரெண்டு உயிரெழுத்துகளும் முதலெழுத்துகளாக வரலாம்.
2. உயிர்மெய் அல்லாத மெய்யெழுத்து எதுவும் முதலெழுத்தாக வராது.
3. க த ந ப ம ஆகிய ஐந்து உயிர்மெய்களும், இந்த ஐந்துடன் பன்னிரண்டு உயிர்களோடு சேர்ந்த உயிர்மெய்களும் முதலெழுத்துகளாக வரலாம்.
4. ச எனும் எழுத்துடன் அ, ஐ, ஒள ஆகிய மூன்று தவிர்த்து இதர உயிரெழுத்துகளுடன் இணைந்து முதலெழுத்தாக வரலாம்.
5. அ ஐ ஔ தவிர்த்து இதர உயிர்களுடன் சேர்ந்து மட்டுமே ச முதலெழுத்தாக வரும்.
6. ஞகரம், ஆ எ ஓ என்னும் மூன்று உயிர்களுடன் மட்டுமே முதலில் வரும்.
7. யகரம் ஆ என்னும் உயிர் தவிர்த்து முதலெழுத்தாக வராது.

இதைத்தவிர பிற உயிர்மெய்கள் ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகியவை முதலெழுத்துகளாக வரவே வராது. சில விதிவிலக்குகள் தவிர.

உச்சரிப்பைப் பார்த்தால்,
ம் – க்கு அப்புறம் ப வந்தால் BA என்றுதான் உச்சரிக்கப்படும். கம்பம், செம்பு, ப என்னும் எழுத்து முதலெழுத்தாக வந்தால் PA என்றுதான் உச்சரிக்கப்படும். பன்னீர், பல், பல்லி, பனை, பசி, பசு, பட்டினி... ங் – க்கு அடுத்து க வந்தால் GA என்றுதான் உச்சரிக்கப்படும். இன்னும் இதுபோல விளக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வளவு தெளிவான மொழியியல் விளக்கங்கள் எப்போது எழுதப்பட்டன... இப்போது இல்லை. வெள்ளைவாரணார் கருத்துப்படி கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் – அதாவது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்று கருதாவிட்டாலும், குறைந்தபட்சம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது தொல்காப்பியம். அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியியல் விதிகள் வரையறுக்கப்பட்டு விட்டன.
 — 

 நன்றி: shared Melchi Jasper's status.
with Kavi Priyan and 18 others.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!